சுவாமி விபுலாநந்தரின் நினைவு தினம் இன்றாகும் (19-07-2021)
முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தர்
1) வங்கக் கடலலைகள் எந்நாளும்
வணங்கும் காரேறு மூதூரின்
கங்குல் அகற்றிடவே வந்துதிக்கும்
காலைக் கதிரவன்னொ ளிபரப்ப
மங்கல நாதமெங்கும் ஒலியெழுப்ப
மக்கள் ஆர்ப்பரித்துக் குதூகலிக்க
தங்க மகன்தம்பிப் பிள்ளையவன்
தரணி மகிழ்ந்திடவே வந்துதித்தான்.
2) தந்தை சாமித் தம்பிக்கும்
தாயவள் கண்ணம் மையார்க்கும்
வந்து தித்த தம்மகனை
மகிழ்வுடன் எடுத்துச் சென்றங்கே
கந்தன் உறையும் சன்னிதியாம்
கதிர்கா மத்தில் தன்மகனின்
முன்னையப் பெயரினை மாற்றினார்கள்
மயில்வா கனன் மலர்ந்திட்டான்.
3) குஞ்சுத்தம் பியாசிரிய ரைத்தன்
குருவாகப் பெற்றிட்ட தாலே
செந்தமிழும் ஆங்கிலமும் சேர்ந்து
சிறுவயது முதலாகச் சிறப்புடன்
எந்நாளும் விருப்புடனே கற்று
எல்லோரின் மனதையுமே கவர்ந்து
தன்னொளிப ரப்பும்தா ரகையாய்
சுடரொளியா கத்திகழ்ந்திட் டாரே.
4) கல்விதனில் சிறந்து விளங்கியதால்
கற்றிட்ட கல்விக் கூடத்தில்
நல்லாசி ரியர்ப தவிதனையும்
நயமாகப் பெற்று மகிழ்ச்சியுடன்
வல்லதுணி வுடனே மேற்கொண்டு
விஞ்ஞானக் கல்வி கற்றதினால்
பல்கலைக்க ழகத்தின் பட்டத்தை
பெற்றதனால் பெருமை பெற்றாரே.
5) இந்துக்கல் லூரியில் வகித்த
இணையற்ற அதிபர் பதவியை
மனமுவந்து விட்டு, தொடர்ந்து
மைலாப்பூ ரின்ராம கிருஷ்ண
மன்றத்தில் விபுலா நந்தர்
துறவுப்பெ யரைப்பெற் றபின்பு
எண்ணற்ற பணிகள் செய்ய
இலங்கைக்கு மீண்டும் வந்தார்.
6) கல்வியதை ஏழைகளுக்கு புகட்டிட
அயராது ஓய்வின்றி உழைத்தார்
செல்லக்கு ழந்தையாக கல்லடி
சிவாநந்த வித்தியால யமைத்தார்
எல்லாவி னத்தினரும் கற்றிட
ஏற்றிவைத்தார் கல்வித்தீ பத்தையே
வெள்ளத்த னையமலர் நீட்டமாய்
மேலுயர்ந்த துமட்டக்க ளப்பது.
7) முதற்தமிழ் பெருமைதரு பேராசான்
முத்தமிழ் வித்தகரும் ஈழத்தின்
முதற்தமிழ் பண்டிதரும் நீயன்றோ
முத்தான மதுரைதமிழ் சங்கத்தின்
மதயினசா திபேதங்கள் ஒழிப்பதற்கு
மகத்தான பணிசெய்த மாமுனியே
பத்திரிகை ஆசிரியனே பார்போற்றும்
வித்தகனே விண்ணுறையும் மாதவனே.
8) பண்டிதர்கள் மறுத்திட்ட பாரதியை
பயமின்றி ஆட்கொண்ட பண்டிதரே
மண்ணுக்கும் மக்களுக்கும் ஓய்வின்றி
மகத்தான சேவைபல செய்தவரே
எண்ணற்ற உயர்பதவி வந்தபோதும்
எள்ளவுமே தற்பெருமை கொள்ளாது
என்நாழும் உழைத்திட்டாய் சோர்வின்றி
ஏற்றமுறச் செய்திட்டாய் அனைவரையும்.
9) ஈழத்தி ருநாட்டின் இலக்கிய வரலாற்றில்
முத்திரைப தித்த இணையிலா வள்ளலவர்
ஏழிரண்டு ஆண்டு ஆராட்ச் சிபலசெய்து
எமக்குத்தந் தாய்இ ணையற்ற யாழ்நூலை
ஈழத்தார் அன்றி அனைவரும் கொண்டாடும்
ஈசன்உ வக்கும் இன்மலர் மூன்றினையும்
நாளெல்லாம் உதவும் மதங்கசூ ளாமணியை
நாடகநூல் ஆக்கித் தந்தநல் ஆசிரியரே.
10) கலைச்சொல் அகராதி தந்திட்ட
கலைம கள்மைந்தன் வாழியவே
உலகெ லாம்போற்றும் எங்களது
உன்ன தவித்தகரே வாழியவே
நலிவுற் றமக்களது நலம்காக்க
நாளெ லாம்உழைத்த நாயகனே
இலங்கைத் திருநாடு பெற்றெடுத்த
இளங்கோ வேவாழி வாழியவே.
ஆக்கம், க.குமரகுரு